2000 வருடங்களுக்கு மேல் பழைமையான இந்த கோவில் சோழர்கள் ஆட்சியின் போது நன்கு கட்டப்பட்டு, அவர்கள் விரும்பி வணங்கிய கோவிலாக இந்த மதுரகாளியம்மன் கோவில் இருந்திருக்கிறது.


புராணங்களின் படி இவ்வூருக்கு வருகை புரிந்த மதுரகாளியம்மன், இக்கோவில் உள்ள பகுதிக்கு வந்த போது இருட்டி விட்டதால், இங்கு ஏற்கனவே கோவில் கொண்டிருக்கும் செல்லியம்மனிடம் இரவு தாங்கிக்கொள்ள அனுமதி கேட்டாள். அப்போது செல்லியம்மன், தன்னை ஒரு மாந்த்ரீகன் தனது மாந்த்ரீக திறனால் கட்டுப்படுத்தி, அவனுக்கு வேண்டிய பல காரியங்களை தன்னை செய்ய வைப்பதாக கூறி வருந்தினாள். இதற்கு தாம் உதவுவதாக கூறிய மதுரகாளியம்மன் தனது சக்தியால் அந்த மந்திரவாதியை கொன்றாள். இதனால் மகிழ்ந்த செல்லியம்மன், மதுரகாளியம்மன் இங்கேயே தங்கிக்கொள்ளலாம் என்றும் தான் பக்கத்திலுள்ள மலையில் கோவில் கொள்ள போவதாகவும், ஆனால் முதல் வழிபாடு மரியாதை மட்டும் தனக்கே வழங்கப்பட வேண்டும் என செல்லியம்மன் கேட்டுக்கொண்டாள் என்று தல வரலாறு கூறுகிறது. அதன்படியே இன்றும் இக்கோவிலில் முதல் பூஜை செல்லியம்மனுக்கு செய்யப்பட்டு பின்பே மதுரகாளியம்மனுக்கு செய்யப்படுகிறது.



இத்தலத்திற்கு மதுரக்காளியம்மன் வெள்ளிக்கிழமையன்று வருகை புரிந்ததால் இக்கோவில் வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் மட்டுமே திறக்கப்படுகிறது. மீதி நாட்களில் மதுரகாளியம்மன் செல்லியம்மனின் கோவிலில் இருப்பதால் மற்ற நாட்களில் இக்கோவில் நடை திறக்கப்படுவதில்லை என்ற ஐதீகம் கடைபிடிக்கப்படுகிறது. சுவாமி பிரம்மரேந்திரர் என்னும் தவயோகி இக்கோவிலில் “ஸ்ரீ சக்கரத்தை” ஸ்தாபித்துள்ளார். வியாபாரத்தில் நஷ்டம் அடைந்தவர்கள் இந்த கோயிலிற்கு சென்று அம்மனை வழிபட்டால் விரைவில் வியாபாரத்தில் லாபம் பெருகும் என்று கூறப்படுகிறது. அதோடு பிள்ளை வரம், திருமணம், உடல் நலக்கோளாறு போன்ற விடயங்களுக்காகவும் அம்மனை வேண்டிக்கொள்கின்றனர் பக்தர்கள்.தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் இக்கோவில் அம்மனுக்கு அரிசி மாவு விளக்கேற்றி வழிபடுகின்றனர். அந்த அரிசி மாவை வீட்டிலிருந்தோ அல்லது கடையிலோ வாங்குவதில்லை. பக்தர்கள் தங்கள் வீட்டிலிருந்து அரிசியை கொண்டுவந்து, இந்த கோவிலின் வளாகத்திலேயே மாவாக அரைத்து அதில் மாவிளக்கு ஏற்றுகின்றனர். இந்த மாவை அரைப்பதற்கென்றே கோவில் வளாகத்தில் சில இடங்கள் இருக்கின்றன. மதுரகாளியம்மனின் சிலை 4 அடி உயரத்தில் வடதிசை பார்த்தவாறு இருக்கிறது. அவளின் கையில் ஆயுதங்களும், எப்போதும் உணவை அள்ளித்தரும் அக்ஷயபாத்திரத்தையும் வைத்திருக்கிறாள்.



ஸ்ரீ மதுரகாளியம்மன் திருகோவில் பெரம்பலூர் மாவட்டத்தில், சிறுவாச்சூர் என்ற ஊரில் அமைந்துள்ளது இக்கோவிலுக்கு செல்ல போக்குவரத்து வசதிகள் உள்ளன.

0 Comments